தி.நகரில் உள்ள அகரம் அறக்கட்டளை அலுவலகத்தில், நடிகர் சிவகுமாரின் கல்வி அறக்கட்டளையின் 47-வது ஆண்டு விழா நடைபெற்றது. இதில், பிளஸ்-2 முடித்து கல்லூரிகளில் சேர்ந்த 25 மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. மேலும், மூத்த ஓவியரும் சித்திரக் கலைஞருமான ஜீவானந்தனுக்கு ரூ.1 லட்சம் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடியின மக்களின் கல்வி மேம்பாட்டுக்காகப் பணியாற்றும் மூன்று அமைப்புகளுக்கும் நிதியுதவி அறிவிக்கப்பட்டது.

நடிகர் சிவகுமார், தனது 100-வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ படத்தில் கிடைத்த ரூ.25 ஆயிரம் முழுச் சம்பளத்தையும் முதலீடாகக் கொண்டு, 1979-ம் ஆண்டு இந்தக் கல்வி அறக்கட்டளையைத் தொடங்கினார். பின்னர், 2006-ம் ஆண்டு முதல் அகரம் அறக்கட்டளை அதன் முழுப் பொறுப்பையும் ஏற்று செயல்பட்டு வருகிறது.
இந்த விழாவில், கல்லூரியில் சேர்ந்த 25 மாணவர்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.2.50 லட்சம் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது. திண்டிவனத்தில் செயல்படும் தாய் தமிழ் தொடக்கப்பள்ளியில் ஆசிரியர்களின் 2026–27-ம் கல்வியாண்டு சம்பளத்திற்காக ரூ.6.28 லட்சம் வழங்க உறுதியளிக்கப்பட்டது. கடந்த 25 ஆண்டுகளாக இப்பள்ளி இலவசக் கல்வி மற்றும் மதிய உணவு வழங்கி வருகிறது. கடந்த 16 ஆண்டுகளாக அகரம் அறக்கட்டளையும் பள்ளிக்கு உதவி செய்து வருகிறது.
ஈரோட்டைச் சேர்ந்த ‘சுடர்’ அமைப்புக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டது. கடந்த 20 ஆண்டுகளாக பழங்குடியின குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக இவ்வமைப்பு பணியாற்றி வருகிறது. சத்தியமங்கலம் மற்றும் பர்கூர் மலைப்பகுதிகளில் 25 மாலைநேரக் கல்வி மையங்களை நடத்தி, பள்ளிப் படிப்பை இடையில் நிறுத்திய குழந்தைகள் மீண்டும் கல்வியைத் தொடரவும், கற்றல் இடைவெளியைக் குறைக்கவும் உதவி வருகிறது.
தருமபுரி, விழுப்புரம் மாவட்டங்களில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு வழிகாட்டி வரும் ‘வாழை’ அமைப்புக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க உறுதியளிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டம் அய்யூர் வனப்பகுதியில் உள்ள 7 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களை நியமித்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் பணியிலும் இந்த அமைப்பு ஈடுபட்டு வருகிறது.
விழாவில் பேசிய நடிகர் சிவகுமார், கல்வியும் ஒழுக்கமும் இருந்தால் எந்த இடத்திலும் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்தார். தன்னுடைய இளமைக்கால வறுமையையும் கல்வி கற்பதில் சந்தித்த சிரமங்களையும் நினைவுகூர்ந்த அவர், மாணவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து, கவனத்தைச் சிதறவிடாமல் படிக்க வேண்டும் என்றார். தங்களது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் மாணவர்கள் உயர வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
நடிகர் சூர்யா பேசுகையில், முதல் தலைமுறையாகக் கல்வி கற்கும் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 7,000 பேருக்கு கடந்த 20 ஆண்டுகளில் அகரம் அறக்கட்டளை உதவியுள்ளதாகக் கூறினார். முஸ்லிம் மாணவர்கள், மாணவிகள், மலைப்பகுதி மற்றும் கடலோரக் கிராமங்களைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட கல்வி வாய்ப்புகள் குறைவாகக் கிடைக்கும் பிரிவினருக்கும் அகரம் தனது பணிகளை விரிவுபடுத்தி வருவதாகத் தெரிவித்தார்.
தோல்விகளைச் சந்தித்தாலும் மீண்டும் முயற்சி செய்ய வேண்டும் என்றும், பயிற்சியும் தொடர்ச்சியான உழைப்பும் வெற்றிக்கு அவசியம் என்றும் சூர்யா வலியுறுத்தினார். நமக்கு உதவியவர்களை மறக்காமல் நன்றியுடன் இருக்க வேண்டும்; நாம் முன்னேறும்போது மற்றொருவரையும் முன்னேற்ற வேண்டும் என்றார். சமூக வலைதளங்களில் வரும் ரீல்ஸ்களை மட்டும் பார்த்து அதிகம் கற்றுக்கொள்ள முடியாது எனக் குறிப்பிட்ட அவர், யாரைப் பின்பற்றுகிறோம் என்பதில் கவனம் செலுத்தவும், பாட்காஸ்ட்களைக் கேட்கவும், வெற்றி பெற்றவர்களின் வாழ்க்கையை ஆராய்ந்து அறியவும் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்கள், கலைஞர்கள், மாணவர்கள், அகரம் தன்னார்வலர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.
Comments are closed.