விருமாண்டிக்கும் சிவனாண்டிக்கும் – விமர்சனம்

விஜய் நடித்த ப்ரியமுடன், யூத் ஆகிய படங்களை இயக்கிய வின்சென்ட் செல்வா இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் என்பதால் கொஞ்சம் எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தோம்.

படத்தின் கதை.. பொள்ளாச்சி அருகே உள்ள கிராமம் ஒன்றில் கவர்மென்ட் வேலையைக்கூட வேண்டாம் என தூக்கி எறிந்துவிட்டு, பிசினஸ் செய்து முன்னேற ஆசைப்படுகிறார் சஞ்சய்.. நண்பன் முருகதாஸ் மூலமாக வட்டிக்கு கடன் வாங்குகிறார்.. திருப்பி தர முடியாத சூழலில், அந்த ஊருக்கு குறும்படம் எடுக்கவருகிறார் தம்பிராமையா. அவர் படத்தில் நடித்தால் பணம் கிடைக்கும் என அவர் பேச்சை நம்பி நடிக்கிறார்..

கத்துக்குட்டி இயக்குனரான தம்பி ராமையா, அந்த ஊர் தலைவர் பெண்ணான அருந்ததியையும் அந்தப்படத்தில் இணைக்க விரும்பி அவருக்கு தெரியாமல் சில காட்சிகளை படமாக்குகிறார். இந்த சமயத்தில் அருந்ததி தனது பேஸ்புக் காதலனைத்தேடி ஊரைவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் எஸ்கேப் ஆகிறார். இந்தகாட்சியையும் சேர்த்து, தனது எடிட்டிங் திறமையால் சஞ்சய்யும், அருந்ததியும் ஒன்றாக ஓடுவது போல சித்தரித்து, அந்த குறும்படத்தை யூடியூப்பில் வெளியிடுகிறார்..

தங்கள் ஊர் தண்ணீர் பிரச்சனை தீருவதற்காக தனது மகளை பக்கத்து ஊர் தலைவரின் பையனுக்கு திருமணம் செய்து தருவதாக வாக்களித்த ஜோ மல்லூரி, சஞ்சய்யை ஊர் மக்கள் முன்னாள் வைத்து தனது மகளை அழைத்து வா இல்லையென்றால் குடும்பத்தையே கொன்றுவிடுவேன் என மிரட்டுகிறார். சென்னைக்கு நண்பனுடன் கிளம்பும் சஞ்சய் அருந்ததியை கண்டு பிடித்தாரா..? இல்லையா என்பது க்ளைமாக்ஸ்..

கதையை கேட்டவுடன் அட இதை எங்கேயோ கேள்விப்பட்ட ஞாபகம் வருகிறதே என தோன்றுகிறதா…? சந்தேகமேயில்லை.. மலையாளத்தில் நிவின்பாலி, மஞ்சிமா மோகன் நடிப்பில் வெளியான ‘ஒரு வடக்கன் செல்பி’ படத்தின் கதை தான் இது.. அதிலிருந்து தேவையானதை மட்டும் உருவி, தண்ணீர் பிரச்சனை, இரண்டு ஊர் பஞ்சாயத்து என நம்ம ஊர் ஐட்டங்களை உள்ளே நுழைத்திருக்கிறார்.

புதுமுகம் சஞ்சய் டைரக்டர் என்ன சொல்லி தந்துள்ளாரோ, அதை அப்படியே ஒப்பித்துள்ளார்.. அழகான அருந்ததி நாயருக்கு நடிக்கும் வாய்ப்பு குறைவு.. இடைவேளைக்குப்பின் முகத்தை சோகமாகவே வைத்திருக்கிறார். தம்பி ராமையாவும் கும்கி அஸ்வினும் சேர்ந்து குறும்படம் எடுக்கிறேன் என கலகலப்பூட்ட முயற்சித்திருக்கிறார்கள்.. ஆடுகளம் முருகதாஸ் இன்னொரு ஹீரோ போலவே படம் முழுவதும் வருகிறார். கந்துவட்டி தாதாவாக யோகிபாபு வரும் காட்சிகள் எல்லாம் அமர்க்களம்.

இடைவேளைக்குப்பின் ஒரு ஹோட்டலில் வைத்து சுந்தர்.சி பாணியில் ஆள் மாறாட்ட காமெடி என்கிற பெயரில் முக்கால் மணி நேரம் ஓட்டியிருக்கிறார்கள். அதில் மனோபாலா, மயில்சாமி, சோனா ஆகியோரை வைத்து கலகல ஜுகல்பந்தி நடத்தியிருக்கிறார்கள். கதையை தேடாமல் எதிர்பார்ப்பில்லாமல் போனால் ஒருமுறை பார்த்து ரசிக்கலாம்.

Virumandikkum SivanandikkumVirumandikkum Sivanandikkum Movie ReviewVirumandikkum Sivanandikkum Tamil Movie ReviewVirumandikkum Sivanandikkum Tamil Review