‘நூறுசாமி’ விமர்சனம்

நடிகர்கள் : ஸ்வாசிகா, விஜய் ஆண்டனி, அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அணில், பாலாஜி சக்திவேல், சுப்பிரமணிய சிவா, கருணாஸ், அருள்தாஸ், லிஜோமோல், ஜென்சன் திவாகர், வினோதினி, பக்ஸ், முனீஸ்காந்த்
இசை : பாலஜி ஸ்ரீராம்
ஒளிப்பதிவு : எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ்
இயக்கம் : சசி
தயாரிப்பு : விஜய் ஆண்டனி பிலிம் கார்ப்பரேஷன் – மீரா விஜய் ஆண்டனி

இளம் வயதில் விதவையான ஸ்வாசிகா, தன் மகன்கள் கல்லூரி முதலாம் ஆண்டு படிக்கும் போது, மறுமணம் செய்ய விரும்புகிறார். தன் எண்ணத்தை மூத்த மகன் அஜய் திஷானிடம் சொல்லும் போது அவர் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவிக்க, அதிர்ந்து போய்விடுகிறார்.

நான்கு ஆண்டுகள் கழித்து தன் அம்மாவின் எண்ணத்திற்கு மதிப்பளிக்கும் அஜய் திஷான், அவருக்கு மறுமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார். அவரது முடிவுக்கு அவரது சகோதரரும் ஆதரவு தெரிவிக்க, இரண்டு பிள்ளைகளும் சேர்ந்து தனது அம்மாவுக்கு மறுமணம் செய்து வைக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், சொந்தமும், ஊர் மக்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அவர்களது எதிர்ப்பை மீறி தன் அம்மாவுக்கு மறுமணம் செய்து வைத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

தற்போதைய காலக்கட்டத்திலும் பெண்களின் நியாயமான விருப்பம் நிறைவேறுவதற்கு தடையாக இருக்கும் சமூக கட்டமைப்புகளை தகர்த்தெரியும் படைப்பாக இயக்கியிருக்கும் இயக்குநர் சசி, உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இன்னமும் அறியாமையில் மழுங்கி கிடக்கும் சமூகத்திற்கு சாட்டையடி கொடுத்திருக்கிறார்.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகா, செல்வி என்ற கதாபாத்திரத்தையும், அவரது மன போராட்டங்களையும் தன் நடிப்பில் மிக சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கிறார். மறுமணம் பற்றிய தனது விருப்பம், அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மகனின் செயலை கண்டு அதிர்ந்து போவது, பிறகு அதே பிள்ளைகளை பிரிய வேண்டிய சூழலை நினைத்து கதறுவது, தனிமையில் தன் ஆதங்கத்தை மின் விசிறியிடம் பரிமாறுவது என்று படம் முழுவதையும் தன் நடிப்பால் தாங்கிப் பிடித்திருக்கிறார்.

சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் விஜய் ஆண்டனியின் திரை இருப்பு படத்திற்கு பெரும் அடையாளத்தை கொடுத்திருக்கிறது. பெரிய அளவுக்கு அவரது கதாபாத்திரற்கான வாய்ப்பு இல்லை என்றாலும், சில வசனங்கள் மூலம் அவரது கதாபாத்திரமும் கவனம் பெறுகிறது.

ஸ்வாசிகாவின் மகன்களாக நடித்திருக்கும் அஜய் திஷான், சக்தி, பாடினி குமார், காவ்யா அனில், கருணாஸ், லிஜோமோல், பாலாஜி சக்திவேல், அருள்தாஸ், முனீஷ்காந்த், ஜென்சன் திவாகர், பக்ஸ், வினோதினி என அனைவரும் கொடுத்த வேலையை குறையின்றி செய்திருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் எஸ்.பி.தர்ஷன் கிர்லோஷ் கதைக்களம் மற்றும் கதாபாத்திரங்களை உண்மைக்கு நெருக்கமாக காட்சிப்படுத்தியிருக்கிறார். பாலாஜி ஸ்ரீராம் இசையில் பின்னணி இசை காட்சிகளுக்கும், கதாபாத்திரங்களுக்கும் உயிரூட்டியிருக்கிறது. ஹரிஷ் யுவராஜின் நேர்த்தியான படத்தொகுப்பு மற்றும் கலை இயக்குநர் வி.சசிகுமாரின் பணி படத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் பயணித்திருக்கிறது.

உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட கதை என்றாலும், அதை சினிமா பாணியில் மிக சிறப்பாக கையாண்டிருக்கும் இயக்குநர் சசி, பிள்ளைகள் பெரியவர்களான பிறகு நடக்கும் மறுமணங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்களையும் ஏற்றுக்கொள்ளும்படி திரைக்கதை மற்றும் காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

மறுமணங்கள் பெண்களின் விருப்பமாக இருந்தாலும், அதை செய்து வைப்பது ஆண்களின் கடமை என்ற கருத்தை மிக ஆழமாக பதிவு செய்திருக்கும் இயக்குநர் சசி, அதை திரை மொழியில் நாகரீகமாகவும், அனைத்து தரப்பினரும் ஏற்றுக்கொள்ளும்படியான உணர்வுப்பூர்வமான படைப்பாக கொடுத்து ‘நூறுசாமி’-யை கைதட்டி பாராட்ட வைத்திருக்கிறார்.

ரேட்டிங் 4 / 5

nooru sami movie reviewnooru sami reviewtamil movie nooru sami reviewதமிழ்ப் படம் நூறுசாமி விமர்சனம்நூறுசாமி திரைப்பட விமர்சனம்நூறுசாமி விமர்சனம்