’சுமோ’ விமர்சனம்

நடிகர்கள் : சிவா, பிரியா ஆனந்த், யோகி பாபு, சதிஷ், யோஷினோரி தாஷிரோ, டிவிவி கணேஷ், சேத்தன், நிழல்கள் ரவி
இசை : நிவாஸ் கே.பிரசன்னா
ஒளிப்பதிவு : ராஜீவ் மேனன்
இயக்கம் : எஸ்.பி.ஹோசிமின்
தயாரிப்பு : வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் – ஐசரி கே.கணேஷ்

பல வருடங்கள் காத்திருப்புக்கு பிறகு வெளியாகியிருக்கும் ‘சுமோ’ ரசிகர்களை சூப்பர் என்று சொல்ல வைக்கிறதா? அல்லது சொதப்பல்…என்று புலம்ப வைக்கிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.

சென்னையை சேர்ந்த அலைச் சறுக்கு (Surfing) விளையாட்டு வீரரான சிவா, வழக்கும் போல் அலைச் சறுக்கு விளையாட கடலுக்கு செல்லும் போது, ஒருவர் கரை ஒதுங்கியிருக்கிறார். அவரை மீட்டு சிவா காப்பாற்றுகிறார். வேறு நாட்டவரான அவர் எந்த நாட்டவர் உள்ளிட்ட எந்த விவரங்களும் தெரியாததோடு, தான் யார்? என்பதும் அந்த நபருக்கு நினைவுக்கு வராததால், அவரை சிவாவே பராமரிக்கிறார்.

இதற்கிடையே, கரை ஒதுங்கிய நபர் ஜப்பான் நாட்டைச் சேர்ந்தவர் என்பதும், அந்நாட்டில் அவர் மிகப்பெரிய சுமோ மல்யுத்த வீரர் என்பதும் சிவாவுக்கு தெரிய வருகிறது. அவரை அவரது சொந்த நாட்டுக்கு அனுப்பும் முயற்சியில் சிவா ஈடுபடுகிறார். ஆனால், சுமோ வீரர் மீண்டும் ஜப்பானுக்கு வருவதை விரும்பாத ஒரு கும்பல், அவரை அங்கு வரவிடாமல் தடுக்க முயற்சிக்க, அவர்களது முயற்சிகளை முறியடித்து, சுமோ வீரரை மீண்டும் ஜப்பானுக்கு சிவா அழைத்துச் சென்றாரா?, அவரை ஜப்பானுக்கு வர விடாமல் தடுக்கும் கும்பல் யார்? எதற்காக தடுக்கிறார்கள், என்பதை கமர்ஷியலாக சொல்வது தான் ‘சுமோ’.

சிவா வழக்கம் போல் நடிக்க முயற்சிக்காமல் எதார்த்தமாக வாழ்ந்திருக்கிறார். தனது வழக்கமான காமெடி வசனங்களை இயல்பாக பேசி ரசிகர்களை சில இடங்களில் சிரிக்க வைக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் பிரியா ஆனந்துக்கு குறைந்த வேலை என்றாலும் அதை குறையில்லாமல் செய்திருக்கிறார். ஆனால், நாயகி என்று சொல்லிவிட்டு அம்மணிக்கு ஒரு டூயர் பாடல் கூட கொடுக்காதது அவருக்கு மட்டும் அல்ல ரசிகர்களுக்கும் பெருத்த ஏமாற்றம்.

யோகி பாபு, சதீஷ், விடிவி கணேஷ் ஆகியோர் செய்யும் காமெடி போதாது என்று, நிழல்கள் ரவி, சேத்தன், ஸ்ரீநாத், சுரேஷ் சக்கரவர்த்தி என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்களையும் காமெடியர்களாக்க முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், இவர்களது இருப்பு காமெடி சரவெடியாக வெடிக்காமல் புஷ்பானமாகியுள்ளது.

நிவாஸ் கே.பிரசன்னா இசையில், பிள்ளையார் பற்றிய பாடல் மட்டும் திரும்ப திரும்ப கேட்கும் ரகம். மற்ற பாடல்கள் திரைக்கதையை நிரப்ப மட்டுமே பயன்பட்டிருக்கிறது. பின்னணி இசை அளவு.

ஒளிப்பதிவு ராஜீவ் மேனன் என்பது டைடில் கார்டில் மட்டும் தான் தெரிகிறது. அவரது கேமராவுக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு படத்தில் காட்சிகள் இல்லை.

நடிப்பதோடு, படத்தின் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியிருக்கும் சிவா, காமெடி வசனங்கள் பற்றாக்குறையால் தவித்திருக்கிறார். எப்படியாவது யோகி பாபு உள்ளிட்ட நடிகர்களை வைத்து சமாளித்து விடலாம் என்று முயற்சித்திருப்பவர், சில இடங்களில் சிரிக்க வைத்தாலும், பெரும்பாலான காட்சிகள் ரசிகர்களை தூங்க வைத்துவிடுகிறது.

கதை எழுதி இயக்கியிருக்கும் எஸ்.பி.ஹோசிமின் ஜப்பான் சுமோ மல்யுத்த போட்டி மற்றும் அதன் வீரரை சுற்றிய ஒரு உலகளாவிய கதையை காமெடி மற்றும் கமர்ஷியல் ஃபார்முலாவில் கையாண்டிருந்தாலும், திரைக்கதை மற்றும் காட்சி அமைப்புகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பதோடு, கமர்ஷியல் அம்சங்களையும் ரசிகர்களை கவர்ந்திழுக்கும் வகையில் கையாண்டிருந்தால் இந்த ‘சுமோ’ ரசிகர்களால் சூப்பரோ….சூப்பர்….என்று கொண்டாடப்பட்டிருக்கும்.

ரேட்டிங் 2.5/5

sumo movie reviewsumo reviewtamil movie sumo reviewசுமோ திரைப்பட விமர்சனம்சுமோ விமர்சனம்தமிழ்ப் படம் சுமோ விமர்சனம்