நடிகர்கள் : டோவினோ தாமஸ், கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லட்சுமி, பசில் ஜோசப், ரோகிணி, ஹரிஷ் உத்தமன், நிஸ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ்
இசை : திபு நினன் தாமஸ்
ஒளிப்பதிவு : ஜோமன் டி.ஜான்
இயக்கம் : ஜிதின் லால்
தயாரிப்பு : மேஜிக் பிரேம்ஸ் – லிஸ்டின் ஸ்டீபன், டாக்டர். சஜரீஸ் தாமஸ்
1900, 1950 மற்றும் 1990 ஆகிய மூன்று காலக்கட்டங்களில் பயணிக்கும் கதையை ஃபேண்டஸி மற்றும் கமர்ஷியல் ஜானரில் மட்டும் இன்றி சமூக அரசியல் பேசும் படமாகவும் வெளியாகியிருக்கும் ‘ஏ.ஆர்.எம்’ திரைப்படம் வியக்க வைக்கிறதா? அல்ல வெறுப்பேற்றுகிறதா?, விமர்சனத்தை பார்ப்போம்.
அரசர் ஒருவர் விண்கற்களை பயன்படுத்தி அதிசய விளக்கு ஒன்றை உருவாக்குகிறார். சியோதி என்ற பெயர் பெற்ற அந்த விளக்கால் அந்த நாடே சீறும் சிறப்புமாக இருக்க, திடீரென்று அந்த நாட்டுக்கு ஒரு பிரச்சனை ஏற்படுகிறது. அதில் இருந்து மாவீரன் குஞ்சிக்கெழு அந்த நாட்டை காப்பாற்றுகிறார். மகிழ்ச்சியடையும் அரசர், வீரனிடம் எதை கேட்டாலும் தருகிறேன், என்று சொல்ல, அவரும் அந்த அதிசய சியோதி விளக்கை தனது ஊருக்கு வழங்குமாறு கேட்கிறார். மன்னரும் அவரது விருப்பப்படி அந்த விளக்கை அவருக்கு கொடுக்கிறார்.
அதன்படி, சியோதி விளக்குடன் ஊருக்கு வரும் குஞ்சிக்கெழு திடீரென்று உடல்நிலை பாதிப்படைய, அவருக்கு அந்த விளக்கு பற்றிய ஒரு ரகசியம் தெரிய வருகிறது. அதன் மூலம் வேதனை அடையும் அவர் இறந்து போக, அடுத்தக் காலக்கட்டத்திற்கு பயணிக்கும் கதையிலும் அந்த அதிசய விளக்கு முக்கிய பங்கு வகிக்க, இறுதியாக மூன்றாவது காலக்கட்டத்தில் அந்த விளக்கை திருடுவதற்கான ஒரு கும்பல் ஊருக்குள் நுழைய, அவர்கள் மூலமாக அந்த விளக்கு பற்றி அறியாத பல உண்மைகள் தெரிய வருவதோடு, நாயகன் டோவினோ தாமஸ் மூலமாகவே அந்த விளக்கை திருட மன்னர் குடும்ப வாரிசு ஹரிஷ் உத்தமன் முயற்சிக்கிறார். அதன் பிறகு நடக்கும் சம்பவங்களையும், அதிசய விளக்கின் பின்னணியில் இருக்கும் ரகசியங்களையும் ரசிகர்கள் சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்கும் வகையில் சுவாரஸ்யமாக சொல்வதே ‘ஏ.ஆர்.எம்’ படத்தின் மீதிக்கதை.
குஞ்சிக்கெழு, மணியன் மற்றும் அஜயன் என மூன்று வேடங்களில் நடித்திருக்கும் டோவினோ தாமஸ், மூன்று வேடங்களுக்கும் தோற்றத்தில் மட்டும் இன்றி நடிப்பிலும் வித்தியாசத்தை காட்டை அசத்தியிருக்கிறார். வீரமும், விவேகமும் நிறைந்த குஞ்சிக்கெழு கதாபாத்திரத்தில் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பவர், மணியன் வேடத்தில் ஆக்ரோஷமான நடிப்பை வெளிக்காட்டி மிரட்டியிருக்கிறார். அஜயன் கதாபாத்திரத்தில் காதல், தாய் பாசம், அவமானம் என அனைத்து உணர்வுகளையும் மிக இயல்பாக வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் பதிந்துவிடுகிறார். இப்படி மூன்று வேடங்களையும் தனது நடிப்பு மூலம் ரசிகர்கள் நெஞ்சங்களில் சேர்த்திருக்கும் டோவினோ தாமஸ், படத்தை தூணாக தாங்கியிருக்கிறார்.
நாயகிகளாக நடித்திருக்கும் கிரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ், சுரபி லக்ஷ்மி என மூன்று பேரும் மூன்று காலக்கட்டங்களுக்கு ஏற்ற தேர்வாக இருப்பதோடு, அவர்களின் நடிப்பும் கதாபாத்திரத்தை போல் அளவாக அமைந்திருக்கிறது. பசில் ஜோசப், ரோஹினி, ஹரிஷ் உத்தமன், நிஷ்தர் சையத், ஜெகதீஷ், பிரமோத் ஷெட்டி, அஜு வர்கீஸ், சுதீஷ் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் திரைக்கதை ஒட்டத்திற்கு பலம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கிறார்கள்.
இசையமைப்பாளர் திபு நிணன் தாமஸின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியிருக்கிறது. குறிப்பாக மூன்று காலக்கட்டங்களை தனது பீஜியம் மூலமாக வேறுபடுத்தி காட்டியிருக்கிறார்.
ஒளிப்பதிவாளர் ஜோமன் டி.ஜான் அழகான கேரள பகுதிகளுக்கு கூடுதல் அழகு சேர்க்கும் விதத்தில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார். படத்தொகுப்பாளர் சமீர் மொஹமத், மூன்று கதாபாத்திரங்களையும், மூன்று காலக்கட்டங்களையும் நான் லீனர் முறையில் தொகுத்தாலும், ரசிகர்களுக்கு எந்தவித குழப்பமும் ஏற்படாத வகையில் மட்டும் இன்றி எந்த இடத்திலும் படம் தொய்வடையாதவாறு காட்சிகளை தொகுத்திருக்கிறார்.
சண்டைக்காட்சிகளை வடிவமைத்த விக்ரம் மோர் மற்றும் பீனிக்ஸ் பிரபு, களரி சண்டைக் காட்சியை வடிவமைத்த பி.வி.சிவகுமார் குருக்கள் ஆகியோரது பணியும் படத்திற்கு மிகப்பெரிய பலம் சேர்த்திருக்கிறது. சலீம் லஹிரின் தலைமையில் வி.எஃப்.எக்ஸ் காட்சிகளும் படத்திற்கு கூடுதல் சிறப்பு சேர்த்திருக்கிறது.
ரமேஷ், அகரன் மற்றும் கைலாஷ் ஆகியோரது வசனங்கள் மிக எளிமையாகவும், சுருக்கமாகவும் இருந்தாலும், திரைக்கதைக்கு வலிமை சேர்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. குறிப்பாக மலையாள படம் பார்க்கிறோம் என்ற உணர்வே ஏற்படாத வகையில் தமிழ் வசனங்கள் இடம்பெற்றிருப்பது படத்திற்கு கூடுதல் பலம்.
பாட்டி கதை சொல்ல ஆரம்பிக்கும் முதல் காட்சியிலேயே நம்மை கதைக்குள் ஈர்த்துவிடும் இயக்குநர் ஜிதின் லால், படம் முடியும் வரை பல்வேறு திருப்பங்களை விறுவிறுப்பான காட்சி வடிவமைப்புகள் மூலம் முழு படத்தையும் சுவாரஸ்யமாக நகர்த்தி செல்கிறார்.
ஒரு அதிசய விளக்கை, மூன்று விதமான காலக்கட்டங்கள் ஆகியவற்றை மையமாக வைத்துக்கொண்டு சுதித் நம்பியார் எழுதிய கதைக்கு மிக நேர்த்தியான திரைக்கதை அமைத்திருக்கும் ஜிதின் லால், அதை சமகால பிரச்சனைகளோடு இணைத்து காட்சிகளை வடிவமைத்திருந்தாலும், அது தொடர்பாக பேசப்பட்ட அரசியலை அழுத்தமாக சொல்லாமல் மேலோட்டமாக சொல்லி, தான் சொல்ல வந்ததை ரசிகர்களிடத்தில் நேர்த்தியாக கடத்தியிருக்கிறார்.
விறுவிறுப்பான திரைக்கதை, வியக்க வைக்கும் வி.எப்.எக்ஸ் காட்சிகள், சுவாரஸ்யமான கற்பனை மற்றும் அதிசய விளக்கு பற்றிய எதிர்பார்ப்புகள் என அனைத்து விசயங்களையும் மிக நேர்த்தியாக கையாண்டிருக்கும் இயக்குநர் ஜிதின் லால், 6 முதல் 60 வயதுடைய அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் விதத்தில் ஒரு பிரமாண்டமான திரை அனுபவத்தை இந்த ‘ஏ.ஆர்.எம்’ படம் மூலம் கொடுத்திருக்கிறார்.
ரேட்டிங் 4/5