ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள ‘டோரதி’ திரைப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது. இதையடுத்து படக்குழுவினர் சார்பில் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், “‘டோரதி’ மூலம் திருநர் சமூகத்தை கார்த்திக் சுப்புராஜ் மிக உயர்ந்த இடத்திற்கு கொண்டு சென்றுள்ளார். வசூலைத் தாண்டி காலத்துக்கும் நிற்கும் சிறந்த படமாக இது இருக்கும். நம்மைவிட வாழ்க்கையை நன்றாகப் புரிந்தவர்கள் திருநர் சமூகத்தினர்; சகிப்புத்தன்மையை இந்தப் படம் கற்றுக்கொடுக்கிறது. ‘கடைசி விவசாயி’, ‘கொட்டுக்காளி’ படங்களைவிட 100 மடங்கு சிறப்பான படமாக ‘டோரதி’ உள்ளது. மாஸ் ஹீரோ என்ற பிம்பத்தை உடைத்து ரிஷிகாந்த், சனந்த் பெரிய ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். கீர்த்தி சுரேஷ் படத்தின் உயிராக இருக்கிறார்” என பாராட்டினார்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் பேசுகையில், “சினிமா மக்கள் மனதை மாற்றும் வலிமையான ஆயுதம். திருநர் சமூகத்தை இதுவரை பார்த்த பார்வையை ‘டோரதி’ மாற்றும் என பலர் கூறுகின்றனர். அதுவே இந்தப் படத்தின் வெற்றி. ராஜா சாரின் இசை எங்களுக்கு கிடைத்த ஆசீர்வாதம். படத்தின் இன்னொரு ஹீரோ திரு சார்” என்றார்.
இயக்குநர் வசந்தபாலன் பேசுகையில், “‘டோரதி’ ஆணாதிக்கம், மாஸ் என்ற பெயரில் சினிமாவில் திணிக்கப்படும் தவறான விஷயங்களுக்கு பதிலடி கொடுத்துள்ளது. ‘ரோமியோ-ஜூலியட்’ போல அற்புதமான காதல் படமாகவும் அமைந்துள்ளது. இப்படத்துக்கு தேசிய விருது கிடைக்க வேண்டும். ஒளிப்பதிவு மற்றும் இளையராஜாவின் இசை படத்தின் பலம்” என்றார்.
இயக்குநர் சசி, “‘டோரதி’ படத்தால் நான் தமிழ் சினிமா இயக்குநர் என்பதில் பெருமை கொள்கிறேன். மூன்றாம் பாலினத்தவருக்காக படம் எடுக்க முன்வந்த கார்த்திக் சுப்புராஜ் இன்னும் பல வெற்றிகளை பெற வேண்டும்” என்றார்.
இயக்குநர் லிங்குசாமி, “பேரன்பும் தைரியமும் கொண்டவரால் மட்டுமே ‘டோரதி’ போன்ற படத்தை உருவாக்க முடியும். இரண்டு முறை பார்த்தேன். கார்த்திக் சுப்புராஜை வாழ்நாள் முழுவதும் கொண்டாடலாம். இளையராஜாவின் இசை படத்தின் பெரும் பலம். ரிஷி-சனந்த் ரஜினி-கமல் போல் வளர வேண்டும்” என்றார்.

சக்தி ஃபிலிம் ஃபேக்டரி சக்திவேலன் பேசுகையில், “படத்தை பார்க்காமலேயே கருத்து சுதந்திரம் என்ற பெயரில் எதிர்ப்புகள் கிளம்பின. அவற்றைத் தாண்டி ‘டோரதி’ வசூல் மற்றும் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றுள்ளது. ரிஷி, சனந்த் என இரு திறமையாளர்களை தமிழ் சினிமாவுக்கு இந்தப் படம் கொடுத்துள்ளது. மிகப்பெரிய வெற்றிப்படத்தில் நானும் பங்கு பெற்றதில் மகிழ்ச்சி” என்றார்.
தயாரிப்பாளர் அச்சின் ஜெயின், “இந்தப் படத்தை சிறந்த அனுபவமாக மாற்றிய ரசிகர்கள் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி” என்றார்.
ஷபிதா பேசும்போது, “16 ஆண்டுகளாக திருநர் சமூகத்திற்காக பணியாற்றி வருகிறோம். பல படங்கள் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருந்தாலும் ‘டோரதி’ எப்போதும் ஸ்பெஷல். படம் பார்த்து கண்ணீர் விட்டு அழுதேன். இது எங்கள் சமூகத்தின் குரலாக உள்ளது. நிஜ வாழ்க்கையில் என்னை ஏற்றுக்கொண்டவர் என் அண்ணி. அந்த வகையில் இந்தப் படம் என்னை மிகவும் நெகிழ வைத்தது. திருநர் சமூகம் இன்னும் பல உயரங்களை அடையும் என்பதற்கு ‘டோரதி’ சாட்சி” என்றார்.
மாளவிகா பேசுகையில், “கார்த்தி ஹீரோ, சுப்பு ஹீரோயின், ராஜ்-இளையராஜா சார் என பல்வேறு திறமைகளின் இணைவாக ‘டோரதி’ உருவாகியுள்ளது. ஒவ்வொரு காட்சியும் ரசிக்கும்படி உள்ளது. ரிஷிகாந்த், சனந்த் என இரண்டு அற்புதமான நடிகர்களை கார்த்திக் சுப்புராஜ் அறிமுகப்படுத்தியுள்ளார். எங்களை மதிக்காவிட்டாலும் அவமானப்படுத்தாதீர்கள். இந்த ஆண்டின் பரிசு ‘டோரதி’. இப்படத்துக்கு ஆஸ்கர் விருது கிடைக்க வேண்டும்” என்றார்.
சுபா பேசும்போது, “‘டோரதி’ இந்த சமூகத்திற்கான புரட்சி. ‘பாம்பே’, ‘காஞ்சனா’, ‘அருவி’ போன்ற படங்களைத் தொடர்ந்து, ஜெனரேஷன் காலத்தில் ‘டோரதி’ பேசும் விஷயம் மிகவும் முக்கியமானது. 2050-ம் ஆண்டு வரை சிந்திக்க வைக்கும் படமாக இது உருவாகியுள்ளது. வியாபார நோக்கத்தைத் தாண்டி சமூக நோக்கத்துடன் இயக்குநர் படத்தை உருவாக்கியுள்ளார். சனந்த், ரிஷிகாந்த் இருவருக்கும் நல்ல எதிர்காலம் உள்ளது. அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும்” என்றார்.
Comments are closed.