‘திரு.வி.க. பூங்கா’ திரைப்படத்தின் முன்னோட்டத்தை இன்று வெளியிட்டார் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற இந்தியாவின் தங்கமகன் பத்மஸ்ரீ மாரியப்பன். காதல் தோல்வியில் சிலர் தற்கொலை முடிவை எடுக்கிறார்கள். அதை தடுக்கும் முயற்சியாக இந்த படத்தை எடுத்திருக்கிறேன் என்கிறார் படத்தின் இயக்குனர் செந்தில்.அம்.
இந்தவிழாவில் தங்க மாரியப்பன் பேசும்போது, ‘‘இந்த படத்தை எனக்கு போட்டு காண்பித்தார் இயக்குனர். படம் எனக்குப் பிடித்திருந்தது. மாணவர்கள் காதலில் தோல்வியடைந்தால் தற்கொலையில் ஈடுபடுகிறார்கள். நானும் காதலித்திருக்கிறேன். நான் காதலித்தது விளையாட்டை. சில நேரங்களில் எனக்கும் சில கஷ்டமான தருணங்கள் அமைந்திருக்கின்றன. அந்த சமயத்தில் கூட மனம் தளரவில்லை. கஷ்டப்பட்டால் என்றாவது ஒரு நாள் நிச்சயம் வெற்றி கிடைக்கும் என்பதில் உறுதியாக இருந்தேன். நான் முடியாது என்று நினைத்து, அன்று தவறான முடிவு எடுத்திருந்தால் இந்தளவுக்கு வந்திருக்க மாட்டேன். கஷ்டப்பட்டு உழைத்ததால் தான் நான் இந்தளவுக்கு வந்திருக்கிறேன். ‘திரு. வி.க. பூங்கா’ படத்திலும் இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்கள். சரியான கதைக்கருவை படமாக்கியிருக்கிற அவருக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.’’ என்றார்.
நிகழ்ச்சியில் தயாரிப்பாளரும், இயக்குநரும், நடிகருமான திரு.செந்தில்.செல்.அம் பேசுகையில், ‘இந்த படத்தைப் பற்றி நான் எதுவுமே பேசப் போவதில்லை. ஒரு நல்ல படத்தை இயக்கியிருக்கிறேன். இன்றைய நிலையில் திருவள்ளுவர் இருந்திருந்தால், ‘எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்கிற குறளில், ‘அறிவு’ என்பதை எடுத்துவிட்டு, ‘பகுத்தறிவு’ என்று மாற்றியிருப்பார்.
பகுத்தறிவுடன் யாரும் சிந்திக்காததால் தான் இன்று தோல்விகளும், தற்கொலைகளும் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தப் படம் தற்கொலை, மனித குலத்திற்கு எதிரான செயல் என்று சொல்கிற படம்’ என்று கூறினார்..

Comments are closed.