இன்று அனைவராலும் பயன்படுத்தப்படும் ஒன்றுதான் வாட்ஸ் அப்’.. இதனை டைட்டிலாக மாற்றி தமிழில் ‘பகிரி’ என்கிற படம் உருவாகியுள்ளது.. ஆனாலும் இந்தப்படம் விவசாயத்தின் மேன்மையை பேசும் படமாக உருவாகியுள்ளது. பகிரி’ படத்தின் நாயகனாக பிரபு ரணவீரன், நாயகி ஷார்வியா, ஆதிரா, ரேகாநாயர் ஆகியோர் நடிக்கின்றனர்..
இந்தப்படத்தின் இசைவெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. சமுத்திரக்கனி வசந்தபாலன், நமீதா உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்ட இந்த விழாவில் ‘கங்காரு’ படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி பேசும்போது, கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா படம் எடுக்கிறோம் என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
அவர் பேசியதாவது, “”நாங்கள் இந்தப் ‘பகிரி’ இயக்குநர் இசக்கி கார்வண்ணன் எல்லாருமே ஒரே ஆலமரத்திலிருந்து வந்த விழுதுகள்.. இப்படத்தின் இசையமைப்பாளர் கருணாஸ் ஜல்லிக்கட்டு பற்றி சட்டசபையில் பேசியிருக்கிறார். மகிழ்ச்சி. இன்று தமிழ் சினிமா குற்றுயிரும் குலையுயிருமாக இருக்கிறது. சிறு படங்களுக்கு ஒரே நம்பிக்கை ஊடகங்கள்தான். ஆனால் படம் பார்த்து விமர்சனங்கள் பத்திரிகைகளில் வருவதற்குள் திரையரங்கில் படம் இருப்பதில்லை. தூக்கி விடுகிறார்கள்.
இன்று சினிமாவை யாரும் பார்க்காமலில்லை. திருட்டு விசிடியில் கூட காசு கொடுத்துதான் சினிமா பார்க்கிறார்கள். இணையதளங்களில் பதிவிறக்கம் செய்யக்கூட காசு கொடுத்துதான் பார்க்கிறார்கள். திரையரங்கில் போய்ப் பார்க்க ஒரு குடும்பத்துக்கு 2000 ரூபாய் செலவாகிறது. ஏன் எல்லாரையும் திரையரங்கு போய் படம் பார்க்கக் கட்டாயப்படுத்த வேண்டும் ?
கள்ளச் சாராயத்தை ஒழிக்க டாஸ்மாக் வந்தது போல் திருட்டு விசிடியை ஒழிக்க அதையும் சட்டப்பூர்வமாக்கிவிடுங்கள். அதனால் வரும் வருமானத்தை ஏன் இழக்க வேண்டும்? திரையரங்கிற்கு மக்கள் வரவில்லை என்கிறார்கள். சினிமா டிக்கெட்டை விட பார்க்கிங் கட்டணம் அதிகம். பார்க்கிங்கிற்கே 250 ரூபாய் செலவாகிறது. .பின் திரையரங்கிற்கு எப்படி வருவார்கள்?
காலை, மதியம் காட்சிக்கு கேண்டீனில் வியாபாரம் இல்லையென்றால் படத்தைத் தூக்கி விடுகிறார்கள். கேண்டீனில் வியாபாரம் செய்வதற்கா தயாரிப்பாளர்கள் கஷ்டப்பட்டு படம் எடுக்கிறார்கள்? தயாரிப்பாளர்கள் இவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுக்கிறோம். ஆனால் காலைக் காட்சிக்குக் கூட முழுதாக கூட்டம் வரவில்லை. ஆனால் அதில் நடித்த நடிகர் ஒரு கோடி ரூபாய்க்கு மேல் சம்பளம் கேட்கிறார். இவை எல்லாமே மாறவேண்டும். திரையரங்கிற்கு படம் கொடுக்கும் போது ஏன் சதவிகித அடிப்படையில் வியாபரம் செய்ய மறுக்கிறார்கள்?” என்றார்.